நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி கேரளாவில் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றுள்ளார். நேற்று மாலை விமானம் மூலம் கொச்சி வந்த அவர் பாஜக இளைஞர் பாசறை நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மத்தியப் பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி கேரளாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டையுடன் வந்தார். இந்நிலையில் இன்று நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி கேரளாவில் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.
கேரளாவில் நாட்டிலேயே முதல்முறையாக 'வாட்டர் மெட்ரோ' எனும் படகு சேவை துவங்கப்பட இருக்கிறது. கேரளாவின் கொச்சி துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10 சிறிய தீவுகளை இணைக்கும் வகையில் 76 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாட்டர் மெட்ரோ சேவைக்கான உள்கட்ட அமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்று 38 வாட்டர் மெட்ரோ சேவை முனையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் வாட்டர் மெட்ரோ சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. கேரளம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று இந்த சேவையை தொடங்கி வைக்க இருக்கிறார்.