கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர், அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஸ்வப்னா என்ற தகவல் தொடர்பு துறையில் பணியாற்றும் பெண், இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை எனவும், அதிகாரிகளின் ஆணையைப் பின்பற்றி எனது பணிகளை மட்டுமே செய்தேன் என, கூறி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிப்பதால் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்கும் என்று தன்னுடைய வாதத்தை வைத்தார். அவரின் வாதத்தை கேட்ட நீதிமன்றம் வழக்கை 14ம் தேதி ஒத்தி வைத்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. ஸ்வப்னா உள்ளிட்ட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.