நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடர், வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் கடந்த 10ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசியலமைப்பு சட்டத்தின் 67(பி) பிரிவின் கீழ் சமர்பிக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவியது.
இந்த நிலையில், 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்து ஹரிவன்ஷ், ‘இத்தகைய தீர்மானம் கொண்டு வருவதற்கு தேவையான 14 நாள் கட்டாய அறிவிப்பு வழங்கப்படவில்லை. மேலும், நோட்டீஸில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரின் பெயர் தவறாக எழுதப்பட்டிருக்கிறது. இது தலைவரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.