நண்பரை மது அருந்த அழைத்து விட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள ஜானகிபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்யன். இவர் தனது நண்பரான ஹிமான்சு மது அருந்த அழைத்துள்ளார். அதன் பேரில், இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் பேச்சுவார்த்தை தொடர ஆரம்பித்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹிமான்சு, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆர்யனை நோக்கி சுட்டார்.
துப்பாக்கிக் குண்டு வயிற்றில் துளைத்ததால், ஆர்யன் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அங்கு ஏற்பட்ட துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஆர்யனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, ஹிமான்சுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யன், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிக் குண்டு பட்ட ஆர்யன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.