பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சசராமில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனா வைரஸுக்கு எதிராக, பீகார் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. கரோனா குறித்து பீகார் மக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனர். வதந்திகள் மூலம் மக்களைச் சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இருளில் இருந்து மீண்ட பீகார் மக்கள் மீண்டும் இருளுக்குள் செல்ல மாட்டார்கள்" என்றார்.
இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.