நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த சில கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்த அதற்கு எதிர்வினைகள் குவியத் தொடங்கியுள்ளது.
அதேநேரம் நேற்று இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த அமித்ஷா, ''நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். மோடியின் அரசாங்கம்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது'' என தெரிவித்திருந்தார்.
இதில் நேரு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளில் பாஜக எம்பி ஒருவர் காயமடைந்தார். இதில் ராகுல்காந்தி தாக்கியதால் அவர் காயமடைந்ததாக பாஜகவினர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பேசிய அவர், ''நேருவைப் பற்றி பாஜகவினர் தெரிவித்த அனைத்து கருத்துக்களும் பொய்யானது. இந்த தேசத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளை அடிக்க அனுமதி அளிப்பார்கள் மீது தான் எங்களின் வழக்கு. கடவுளின் பெயரைச் சொன்னால் நேரடியாக பல ஜென்மங்களுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்வதை நான் கண்டிக்கிறேன். அவையில் பேசும்போது பாஜகவினர் கடவுளோடு ஒப்பிடுவதாக நினைத்துக்கொண்டு மதிப்புக்குரிய தலைவர்களை பற்றி பேசுவது தவறானது. அந்த வகையில் அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் பேசினார்கள். அதற்கு எங்களின் கண்டனம். அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அவரது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஊர்வலமாக வந்து அவைக்குள் செல்ல முயன்றபோது பாஜகவினர் உள்ளே இருந்து வந்து எங்களை தடுத்தனர். எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க பாஜகவிற்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அவையை நடத்துவதில் பாஜகவிற்கு விருப்பமில்லை. ஜனநாயகத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை'' என தெரிவித்துள்ளார்.