மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில் விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி க்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கிய ஆவணம் (toolkit) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து, 22 வயதான இந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும் அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும் அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதேநேரம் ஜாமீன் கோரியும் திஷா ரவி மனுத் தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான, மேலோட்டமான ஆதாரங்களை வைத்து பார்க்கையில், எந்த குற்றப்பின்னணியும் இல்லாத 22 வயது பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.