இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேற்குவங்கமும் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் காலை 7 மணியிலிருந்து 10 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பேக்கரி கடைகளை மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் ஊரடங்கை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ள மம்தா, பொருளாதார காரணங்களுக்காக முழு ஊரடங்கை பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.