தெலுங்கானாவில் ஆடு திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர்களை ஒரு கும்பல் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மந்தமாரி அங்காடி பகுதியைச் சேர்ந்தவர் கோமுராஜுலா ராமு. இவரது குடும்பத்தினர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது ஆடுகள் கடந்த இரண்டு நாள்களாக காணவில்லை. காணாமல் போன ஆடுகளை எங்கு தேடியும் கிடைக்காததால், அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த தேஜா (19), கிரண் (30) ஆகிய இருவரையும் கோமுராஜுலா குடும்பத்தினர் அழைத்து வந்து தங்கள் கால்நடைத் தொழுவத்தில் வைத்து விசாரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து காணாமல் போன ஆடுகளுக்கு நீங்கள் தான் பணம் தர வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் இருவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டு, அவர்களுக்கு அடியில் கட்டைகளைக் கொண்டு தீயை மூட்டி பல மணி நேரம் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களால் விடுவிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதை தங்களது வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்களின் குடும்பத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், பட்டியலின இளைஞர்களைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். பட்டியலின இளைஞர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தாக்கியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.