கரோனா கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் தாராவி பகுதியை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது..
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.26 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக 8.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 22,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு காணப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், இந்தியாவின் மக்கள் நெருக்கம் மிக்க பகுதியுமான தாராவியில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த மாதத்தில் அப்பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த சூழலில், தற்போது அங்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு, கரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களும் மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாராவி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “கரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்தாலும், அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா, தாராவி ஆகிய பகுதிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவை நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்கும். வளர்ந்த நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்வதன் காரணமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. நமக்குத் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு, ஒற்றுமை அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.