தன் பாலின சேர்க்கை குற்றம் எனக் கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 377ஐ உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தன்பாலின திருமணத்திற்கு இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் & வெளிநாட்டுத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டது. இந்தநிலையில் இன்று (25.02.2021) மத்திய அரசு இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் "நாட்டின் சட்டங்களின் கீழ், தன் பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுவதற்கான அடிப்படை உரிமையைக் கோர முடியாது" எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, “லிவ்விங் டூகெதரில் சேர்ந்து வாழ்வதும், தன் பாலினத்தைச் சேர்ந்தவரோடு பாலியல் உறவு கொள்வதும் ஒரு கணவன், மனைவி மற்றும் குழந்தை என்ற இந்திய குடும்ப அமைப்போடு ஒப்பிட இயலாது” எனக் கூறியுள்ளது.
மேலும் "திருமணம் அதனோடு ஒரு புனிதத்தன்மையைக் கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திருமணம் ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. நம் நாட்டில், ஒரு பயலாஜிக்கல் ஆணுக்கும் ஒரு பயலாஜிக்கல் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், திருமணம் என்பது பழமையான பழக்கவழக்கங்கள், சடங்குகள், நடைமுறைகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்களைப் பொறுத்தது" என மத்திய அரசு, தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.