இந்தியாவில் மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசம் லட்சத்தீவு. 65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். பெரும்பாலானோர் பேசுகின்ற மொழி மலையாளம். தொடக்கக் காலங்களிலிருந்தே லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவென்பது வலுவானதாகவே இருந்துவருகிறது. மலையாள மொழி மட்டுமின்றி ஆங்கிலமும் அதிகளவில் பேசப்படுகிறது. அதனுடன் திவேகி, ஜெசெரி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும், மீன் பதப்படுத்தும் தொழிலையும், சுற்றுலாவையும் நம்பிதான் இங்கு இருக்கின்றனர்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு பகுதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வழக்கமாக ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை ஓர் அரசியல்வாதி இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதே பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளி. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் தினேஷ்வர் சர்மா திடீரென உயிரிழக்க, அவருக்குப் பதிலாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை இப்பொறுப்பில் நியமித்தது மத்திய அரசு.
பிரஃபுல் கோடா படேல் பதவியேற்றவுடன் கரோனா தடுப்பூசி விதிமுறைகளில் கைவைத்தார். இதனால் அங்கு கரோனா பரவல் அதிகமானது. பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தத் தீவில் மாட்டுக்கறியைத் தடை செய்யும் வகையில் சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் குறைவான இந்த தீவில் குண்டாஸ் சட்டத்தை அமல்படுத்த சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இது சட்டமானால் எந்தக் காரணமும் கூறாமல், ஒருவரை ஒருவருடம்வரை தடுப்புக்காவலில் வைக்கலாம். ஏற்கனவே மக்கள் தொகை குறைவான லட்சத்தீவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஏற்கனேவே கொதித்திருந்த லட்சத்தீவு மக்களுக்கு மேலும் ஒரு இடியாக லட்சத்தீவு மேம்பாட்டு சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமாகும் பட்சத்தில் யார் நிலத்தையும், எந்த நிலத்தையும் அரசு கையகப்படுத்தலாம். இது அந்த மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது பெரிய அளவில் பிரஃபுல் கோடா படேலுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அவரைத் திரும்பப் பெற வேண்டுமென நாட்டிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
கேரளாவிலிருந்தும்பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. அம்மாநிலத்தின் அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள்வரை லட்சத்தீவு மக்களுக்கு ஆதராகவும், பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராகவும் குரல்களை எழுப்பினர். இந்தநிலையில் கேரளா சட்டமன்றத்தில், லட்சத்தீவு மக்களுக்கு ஒற்றுமையைத் தெரிவித்தும், பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் லட்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "லட்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு. மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகி அகற்றப்பட வேண்டும். லட்சத்தீவு மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.