Skip to main content

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்; புதிய சாதனை படைத்த அதிபர் கூட்டணி!

Published on 15/11/2024 | Edited on 15/11/2024
President's alliance with new record at Sri Lankan Parliamentary Elections

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அங்கு நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  நேற்று (14-11-24) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 4 மணி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேரில், 196 உறுப்பினர்களை தேர்வு செய்ய இலங்கை மக்கள் வாக்களித்தனர். கட்சிகள் பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் மீதமுள்ள 29 பேர், நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப வாக்கு அடிப்படையில், வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில், பெரும்பான்மையை விட அதிக இடங்களை கைப்பற்றி அதிபர் அநுர குமார திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி வரலாறு படைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி 123 இடங்களிலும், சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 31 இடங்களிலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று  இலங்கை அரசியல் வரலாற்றில் அநுர குமார திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் புதிய சாதனை படைத்துள்ளது. 

இந்த தேர்தலில், அதிபர் அநுரா திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி, 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து போட்டியிட்டது. மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே சகோதரர்கள் ஆகியோர்கள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்