கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில் விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் ப. சிதம்பரம் இல்லத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும் சிபிஐ சார்பில் ப. சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று இரவு 08.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிடோர் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.