70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கொள்ள அனைத்து கட்சியும் தீவிர முனைப்புடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரிடர் என்றும், 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எதுவும் செய்யவில்லை என்றும் பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி வைத்து விமர்சனத்துக்கு உடனடியாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்தார். அவர் கூறியதாவது, பேரழிவு டெல்லியில் இல்லை; அது பா.ஜ.கவுக்கு தான் இருக்கிறது. முதல் பேரழிவு பாஜகவிற்கு முதல்வர் பதவி இல்லை என்பதுதான். இரண்டாவது, பா.ஜ.க.விடம் எந்தக் கதையும் இல்லை. மூன்றாவது, டெல்லி தேர்தலுக்கான எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை. டெல்லியில் பிரதமர் ஆற்றிய 43 நிமிட உரையில் 39 நிமிடம் டெல்லி அரசை மட்டும் தவறாகப் பேசியுள்ளார்.
ஒழுங்காக வேலை செய்வோர் குறை கூற மாட்டார்கள்; குறை சொல்வோர் வேலை செய்ய மாட்டார்கள். ஏதாவது வேலை செய்திருந்தால் டெல்லி மக்களை பிரதமர் குறை சொல்லியிருக்க மாட்டார். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எனது கட்சி டெல்லியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டு சொல்ல தொடங்கினால் மூன்று மணி நேரம் கூட போதாது. கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை என ஏராளமான வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது.
2,700 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி, 8,400 கோடி ரூபாய் மதிப்பிலான விமானத்தில் பறந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைகளை அணிந்த ஒருவர், கண்ணாடி மாளிகையைப் பற்றி குறிப்பிடுவது ஏற்புடையதாக இல்லை. 2020ல், 2022க்குள் டெல்லியில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். இன்று, 2025ல், 1,700 வீடுகளின் சாவியை ஒப்படைத்துள்ளார், கல்காஜியில் 3,000 வீடுகளுக்கு சாவியை வழங்கியுள்ளார். ஐந்து ஆண்டுகளில் 4,700 வீடுகள். வாக்குறுதிகள் மற்றும் வழங்கல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு இது தான். டெல்லியில் 4 லட்சம் குடிசைகள் உள்ளன, 15 லட்சம் மக்களுக்கு வீடுகள் தேவை. அவர்களின் தேர்தல் அறிக்கை 200 ஆண்டுகளாக இருந்தது, ஐந்து அல்ல” என்று கூறினார்.