புதிய மோட்டார் வாகன சட்டம், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் அமலானது. இந்த புதிய சட்டத்தின் மூலம் வாகன விதிமீறல், ஹெல்மெட் அணியாதது, காரில் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்டவைகளுக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. லட்சங்களில் அபராதம் கட்டிய சம்பவங்களும் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், 9 வருடங்கள் பழைய ஆல்டோ கார் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். இந்த காரில் வந்துகொண்டிருந்த அவரை மறித்து சோதனை செய்த உத்தரபிரதேச போலீசார் அவரிடம் ரூ.2ஆயிரத்துக்கான அபராத ரசீதை கொடுத்துள்ளனர். அப்போது அபாரதத்திற்கான காரணத்தை கேட்ட அந்த வாகன ஓட்டி மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரது வாகனம் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக வேறொரு சிக்கனலில் பதிவாகியுள்ளதாக காவலர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். 9 வருட பழமையான ஆல்டோ கார் எப்படி 144 கிலோமிட்டர் வேகத்தில் செல்லும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் காவலர்கள் கண்டுகொள்ளாத நிலையில், இதுகுறித்த புகைப்படத்தையும், போலீசார் கொடுத்த ரசீதையும் இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அன்புள்ள உத்திரப்பிரதேச காவல்துறைக்கு, நான் ஓட்டி வந்தது ஆல்டோ கார். நீங்கள் வேறு ஒரு காரினை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் வாகன எண் என்னுடைய காரின் எண்ணாகவே இருக்கிறது. நீங்கள் என்னுடைய 9 வருட பழைய ஆல்டோ காரை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை 144கிமீ வேகத்தில் ஓட்டிக்காட்டுங்கள். அதை நீங்கள் செய்துவிட்டால், நான் உங்களுக்கு ரூ.2000 ஐ செலுத்திவிடுகிறேன்'' என சவால் விடுத்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.