இந்திய அரசியலமைப்பின் 86வது திருத்தச் சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21 -ஏ புதிய பிரிவைச் சேர்த்தது. அதன்படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளித்துள்ளது. அதன்படி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி வழங்கப்பட்டு அடுத்த வகுப்பில் சேர தகுதி பெற்று வந்தனர்.
இதற்கிடையே இவ்வாறு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி என்ற முறையால் கல்வியின் தரம் குறைகிறது என விமர்சனங்களும் எழுந்தன. இதனையடுத்து கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. அதோடு கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகள் திருத்தப்பட்டன. அந்த விதிகளின்படி ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் இறுதி ஆண்டு தேர்வு எழுதி மாணவ மாணவிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறவில்லையெனில், 2 மாதங்கள் கழித்து பிறகு மீண்டும் இந்த தேர்வை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்படி 2வது தேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சி பெறவிட்டால் அவர் அதே வகுப்பை மீண்டும் தொடர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.