
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் சோப்புகள் மற்றும் ஷாம்பு விற்பனை தடை விதித்து அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு கழிவுநீர் முதன்மைப் பிரச்சனையாக இருக்கும் சூழ்நிலையில், கர்நாடகாவில் உள்ள 17 ஆறுகள் மாசுபட்டு இருப்பதாக அறிக்கைகள் கூறப்படுகின்றன. ஷாம்பு, சோப்பு இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தான் முதன்மையாக நீரின் தரத்தை சீர்குலைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நீர்வாழ் உயிரினங்களும், அன்றாட தேவைகளுக்காக இந்த நீர் ஆதாரங்களை நம்பியிருப்பவர்களும் கடுமையான சிரமத்துக்குள்ளாகி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கர்நாடகா வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே, புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கோயிலுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு குளித்துவிட்டு ஷாம்பு கவர் மற்றும் பயன்படுத்தப்படாத சோப்புகளை போட்டுவிடுகின்றனர். அதனால், புனித யாத்திரைத் தலங்களின் ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சோப்புகள், ஷாம்பு மற்றும் மாசுபடுத்தும் பொருட்களின் விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும். அதே போல், பக்தர்கள் தங்களது துணிகளை தண்ணீரில் வீசாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.