
திருச்சியில் இயங்கி வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான 'பெல்' நிறுவனத்தில் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'பெல்' இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த சுமார் 7000 பேர் பணியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் பொது மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் வழக்கம் போல பணிக்கு வந்திருந்த நிலையில் மாலை வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் அவருடைய குடும்பத்தினர் காணாமல் போன சண்முகத்தை தேடி வந்தனர். அப்பொழுது அலுவலகத்தில் உள்ள அவருடைய அறைக்குச் சென்ற பொழுது அவருடைய அறை உள்பக்கமாக தாழிடப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அறைக் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். சண்முகம் கையில் துப்பாக்கியுடன் சோபாவில் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக 'பெல்' காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும், அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.