கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள், ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதற்கான கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கினர். அதிருப்தி எம்.எல்.ஏக்களால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் குமாரசாமியை பெரும்பான்மை நிரூபிக்க சொல்லி சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் தேதியையும் அறிவித்தார் சபாநாயகர். அதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் குறித்து பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
இவரின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. கர்நாடக மாநில அமைச்சரான சிவகுமார் தீர்மானம் குறித்து பேசும் போது, பாஜக கட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ மும்பை மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆளும் கட்சிக்கும் , எதிர்கட்சிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பாஜக கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கால தாமதம் செய்கிறார் எனவும், உடனடியாக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து ஆளுநர் வஜூபாய் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகரை அறிவுறுத்தினார். ஆனால் கர்நாடக சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவையை நாளை காலை 11.00 மணிக்கு ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி அறிவித்தார். இதனால் அதிர்ச்சியான எதிர்க்கட்சியினர் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் ஆளுநர் வஜூபாய் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளை (19/07/2019) மதியம் 01.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.