கர்நாடகாவில் பதவியிழந்த 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி நடைக்கவுள்ள தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் எடியூரப்பாவின் ஆட்சி கவிழும் நிலை இருக்கிறது. இந்நிலையில், கர்நாடகா ஆட்சியை கலைத்துவிட்டு பேரவைக்கு தேர்தல் நடத்த பாஜக யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது, மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், அந்தக் கட்சியின் 6 எம்எல்ஏக்களுக்கு மேல் பாஜகவை ஆதரிக்கலாம் என்று தலைமையை வலியுறுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
பேரவை உறுப்பினர்களை மிரட்டவே பாஜக இப்படிப்பட்ட செய்திகளை உலவவிடுவதாகவும், ஆட்சியைக் கலைப்பதை பாஜக உறுப்பினர்களே விரும்பமாட்டார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இடைத்தேர்தலுக்கு பிறகு எடியூரப்பா ஆட்சி ஒருவேளை கவிழும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸுடன் மஜத கூட்டணி அமைக்குமா என்பது சந்தேகமே என்றும், பாஜகவுடன் அனுசரித்துப் போகவே அந்தக் கட்சி உறுப்பினர்களில் பலர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.