காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் விலகினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல், கடந்த சில நாட்களாக கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட கபில்சிபலுக்கு சமாஜ்வாதி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவுடன் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு சென்ற கபில்சிபல் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அம்மாநில சட்டப்பேரவைச் செயலாளரிடம் வழங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கபில்சிபலின் விலகல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் 23 அதிருப்தி தலைவர்கள் இருந்த நிலையில், G23 குழுவில் கபில்சிபல் அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.