தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கபில் சிபல் எம்.பி. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் சுதந்திரம் இறந்துவிட்டது. எந்த அரசியலமைப்பும், சட்டமும், நீதிமன்றமும் அதை காப்பாற்ற முடியாது. நாட்டில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். நீதிமன்றங்கள் அதற்கு ஜாமீன் கொடுக்காது” என்று கூறினார்.