ரஷ்ய அதிபர் புதின், உலகம் முழுவதுமுள்ள தேர்தெடுக்கப்பட்ட முன்னணி செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களோடு இன்று உரையாற்றினார். அப்போது இந்தியா - சீனா எல்லை பிரச்சனை, அமெரிக்காவுடனான உறவு ஆகியவை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக பதிலளித்த புதின், இந்திய-சீன பிரச்சனைகளுக்கு இருநாட்டு தலைவர்களுமே தீர்வு காணுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், இந்திய-சீன உறவுகள் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பதை நான் அறிவேன். அண்டை நாடுகளுக்கு இடையே எப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் இந்தியப் பிரதமர் மற்றும் சீனா அதிபர் ஆகிய இருவரின் அணுகுமுறையையும் நான் அறிவேன். அவர்கள் மிகவும் பொறுப்பான நபர்கள். அவர்கள் ஒருவரையொருவர் மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் அவர்களே எப்போதும் தீர்வு காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் வேறு எந்த பிராந்திய சக்தியும் அதில் தலையிடமால் இருப்பது முக்கியம்" என தெரிவித்தார்.
ரஷ்யாவும், சீனாவும் நெருங்கி வருவது, இந்திய - ரஷ்ய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான ஒத்துழைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், "எங்கள் இந்திய நண்பர்களுடனான உயர்ந்த ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இந்த உறவுகள் ஒரு திட்டம் சார்ந்த இயல்புடையவை. பொருளாதாரம், ஆற்றல் மற்றும் உயர்தொழிநுட்பம் ஆகியவற்றில் முழு அளவிலான ஒத்துழைப்பையும் எங்கள் உறவுகள் உள்ளடங்குகின்றன. பாதுகாப்பு துறையில் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவுடன் எங்களுக்கு மிகவும் ஆழமான உறவுகள் உள்ளன. நான் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவது குறித்து மட்டும் பேசவில்லை என தெரிவித்தார்.
மேலும் மேம்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும், தொழில்நுட்பங்களை விரிவாக்குவதிலும் இணைந்து செயல்படுவதில் இந்தியாதான் ரஷ்யாவின் ஒரே நண்பன் என தெரிவித்துள்ள புதின், எங்கள் ஒத்துழைப்பு அதோடு மட்டும் நின்றுவிடாது என்றும் எங்கள் ஒத்துழைப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது எனவும் கூறினார்.