லண்டனில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இங்கிலாந்து லண்டனில் ராணி எலிசபெத் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஸ்வராஜ் வெமலா என்பவர் பணியாற்றி வருகிறார். 48 வயதான விஸ்வராஜ் வெமலா கல்லீரல் நிபுணர்.
இவர் தன் தாயுடன் லண்டனில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். விமானத்தில் சக பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து மருத்துவர் வெமலா விமானத்தில் இருந்த முதலுதவி கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளித்து அந்தப் பயணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இது குறித்து மருத்துவர் வெமலா கூறும் பொழுது, “மருத்துவப் பயிற்சியின் போது ஆபத்தான காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இருந்தாலும் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது எவ்வாறு முதலுதவி செய்வது என்பது எனக்கு புதிதாக இருந்தது.
மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் தவித்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பினார். எனது 7 ஆண்டுக்கால மருத்துவ அனுபவத்தில் என் தாயின் முன்பாக நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது” எனக் கூறினார். விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டதும் நோயாளி மும்பையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவரின் இந்தச் செயலுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.