இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி தீர்மானம் இயற்றியதற்கு இந்தியத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு கடந்த 1969 -ஆம் ஆண்டு முதல், செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தின் 47-வது அமர்வு, நைஜரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "47-வது சி.எஃப்.எம் அமர்வில், இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்களில், இந்தியா குறித்த உண்மையற்ற, தவறான மற்றும் தேவையற்ற குறிப்புகளை நாங்கள் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்கிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்க முடியாத பகுதியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்பட இந்தியாவின் உள் விஷயங்களில் இஸ்லாமிய அமைப்புக்கு எந்தவிதமான இடமும் இல்லை. மத சகிப்புத்தன்மை, தீவிரவாதம் மற்றும் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது போன்றவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட நாடு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது வருந்தத்தக்கது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.