இந்துமத இதிகாசமான இராமாயணத்தின்படி, இராமர் தனது தந்தையின் கட்டளையை ஏற்று, தனது மனைவி மற்றும் தம்பியோடு வனவாசம் மேற்கொள்வார். அவ்வாறு வனவாசம் செல்கையில் இராமர், அயோத்தியிலிருந்து முதலில் சித்திரக்கூடம் என்ற பகுதிக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்த சித்திரக்கூடமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அமைந்துள்ளது.
இந்தநிலையில் இராமர், அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் சென்றதாகக் கூறப்படும் வழியைக் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு ‘ராம் வான் கமன் மார்க்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சாலை 210 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. அயோத்தியை, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ஷ்ரிங்வர்பூர், மஞ்சன்பூர் மற்றும் ராஜபூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக, சித்திரக்கூடத்தோடு இணைக்கும் வகையில் இந்த சாலை உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.