ராணுவ சீருடை அணிந்து பாஜக டெல்லி தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜக கடந்த வாரம் பிரச்சார யுக்தியாக பைக் பயணத்தை கையில் எடுத்தது. கடந்த வாரம் அமித்ஷா தொடங்கிவைத்த இந்த பேரணி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் அதில் பாஜக எம்.பி.யும், பாஜக டெல்லி மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கலந்துகொண்டார். அப்போது அவர் ராணுவ சீருடையை அணிந்து அங்கு பிரச்சாரம் செய்தற். இது தற்போது பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மேலும் அவர் ராணுவத்தை அவமதித்து விட்டதாகவும், தற்போதைய இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தை அரசியலாக்குவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ள அவர், "நான் ராணுவத்தை நேசிப்பவன். எனது தேசப்பற்றை வெளிப்படுத்தவே அப்படி செய்தேன். அது ராணுவத்தை அவமதிப்பு ஆகாது. ஒருவேளை நாளை நான் நேருவின் ஜாக்கெட்டை அணிந்தால், அது அவரை அமவதிப்பதாக ஆகுமா?" என கேட்டுள்ளார். அவர் இப்படி விளக்கம் அளித்த பின்னரும் அவரின் இந்த செயலை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.