இந்திய எல்லையில் உள்ள 10,000 சீன ராணுவ வீரர்களை உடனே திரும்பப்பெற வேண்டும் என அந்நாட்டு அரசினை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொலிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இதன்படி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்படும் எனச் சீனா தெரிவித்தது. ஆனால், இந்திய எல்லையில் மூன்று இடங்களில் 10,000 சீன ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களை உடனே திரும்பப்பெற வேண்டும் என இந்தியா சீனாவை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.