
வட மாநிலங்களில் பனிக் காலம் முடிந்து அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது வட மாநில இந்து சமூக மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இந்த வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்க ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுவர். இந்த பண்டிகை வருகிற மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர் கடந்த சில நாட்களாக மசூதிக்குச் சென்று நோன்பு திறந்து வருகின்றனர். ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் ஒத்துப்போவதால் வடமாநிலங்களில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இந்து மக்களை ஹோலி பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது என்றும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் பீகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூர் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இவரின் சர்ச்சை பேச்சுக்கு, மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், ஹோலி பண்டிகைக்கு இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும் என்று பீகார் மாநில பெண் மேயர் ஒருவர் பேசியுள்ளார். பீகாரின் தர்பங்கா மேயர் அஞ்சும் அரா கூறியதாவது, “தொழுகை நேரத்தை நீட்டிக்க முடியாது. அதனால், ஹோலி பண்டிகையை தொழுகை நேரத்தின் போது இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும். ஹோலி பண்டிகையை மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ஹோலி கொண்டாடுபவர்கள் தொழுகையின் போது, மசூதிகளில் இருந்து இரண்டு மணி நேரம் குறிப்பிட்ட தூரத்தில் தள்ளி இருக்க வேண்டும். ஹோலி பண்டிகையும், ரம்ஜானும் இதற்கு முன்பு பல முறை அமைதியான முறையில் இந்த மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இவரின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “ஹோலி கொண்டாட்டத்திற்கு ஒரு போதும் தடை விதிக்கமுடியாது. பெண் மேயரின் குடும்ப பின்புலத்தைப் பற்றி எங்களுக்கு தெரியும். எப்படி அவரால் ஹோலியை நிறுத்த முடியும்?. ஹோலி ஒரு போதும் நிறுத்தப்படாது, ஒரு நிமிடம் கூட நிறுத்தப்படாது” என்று கூறியுள்ளார். முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வெள்ளிக்கிழமை தொழுகையுடன், ஹோலி பண்டிகையும் இணைந்திருப்பதால், மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.