குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மோர்பி தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பியான மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து அவர் கூறும் பொழுது, “இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 12 குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டேன். விபத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். விபத்தில் அதிகமாக குழந்தைகளும் பெண்களுமே உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்களும் தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.