இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதனால் பல மாநிலங்களில் தற்போதும் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது. குறிப்பாக கேரளாவில் இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்த நிலையில், மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணிமுதல் 7 மணி வரையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஜவுளி மற்றும் நகை கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே இந்த இரண்டு கடைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.