
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.
இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் இந்திய அரசு வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரம், 5 ஆயிரம் எனப் பதிவாகி வந்தது. நேற்று 12,193 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 10,112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,48,81,877லிருந்து 4,48,91,989 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 67,556 லிருந்து 67,806 பேராக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவிற்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.