Skip to main content

ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க தரப்பில் பேரம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Congress MLA says Bargaining on the part of BJP to dissolve the government in karnataka

 

கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக அவ்வப்போது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. கர்நாடகா மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார். இது அப்போது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. 

 

இதையடுத்து, கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கடந்த 18 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கவரவும் பா.ஜ.க.வில் ஒரு தனிக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. சார்பில் எங்கள் எம்.எல்.ஏக்களை அழைத்து என்ன டீல் பேசினார்கள் என்பதை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் என்னிடமும், முதல்வர் சித்தராமையாவிடமும் ஏற்கனவே கூறிவிட்டார்கள். அதனால், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் நடப்பது எங்களுக்கு தெரியும். அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளது. ஆனால், அதைப் பற்றி இப்போது நாங்கள் கூறமாட்டோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யார் யாரை பா.ஜ.க அணுகினார்களோ, அந்த எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் பேச வைப்போம்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், கர்நாடகா ஆட்சியைக் கலைக்க உதவும் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 50 கோடி தரப்படும் என பா.ஜ.க தரப்பில் பேரம் பேசப்பட்டதாக மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சிக் கலைப்பை போல், இப்போதும் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க உதவினால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 50 கோடி வழங்கப்படும் என பா.ஜ.க தரப்பில் பேரம் பேசப்பட்டது. அப்படி காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்