Skip to main content

மூடா வழக்கு; ‘எந்த ஆதாரமும் இல்லை’ - சித்தராமையாவை விடுவித்த லோக் ஆயுக்தா போலீஸ்!

Published on 19/02/2025 | Edited on 19/02/2025

 

Lokayukta police says No evidence against Siddaramaiah

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக மைசூர் லோக்ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) தலைவர் கே மாரிகவுடா கடந்தாண்டு அக்டோபர் 16ஆம் தேதி தனது பதவியை  ராஜினாமா செய்திருந்தார். இது மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், மூடா வழக்கு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்தா போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் சட்ட விதிகளை தவறாக புரிந்துகொள்வதால் ஏதேனும் முரண்பாடுகள் எழுந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களா முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரையும் இந்த வழக்கில் இருந்து லோக் ஆயுக்தா போலீஸ் விடுவித்து இறுதி அறிக்கையை சமர்பித்துள்ளது. மேலும், இந்த அறிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புகார்தாரரான சினேகமாயி கிருஷ்ணாவுக்கு 1 வாரம் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்