ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ஏலூர். இந்த பகுதியில் நேற்று மாலை முதலே, அந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மயக்கமடைந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது ஏலூரை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 10 கிராமங்களில் திடீரென பொதுமக்கள் மயக்கமடையும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் சுகாதாரத்துறை சார்பாக மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு உடனடியாக சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடீரென பொதுமக்கள் மயக்கம் அடைந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர் அங்கேயே மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று பொதுமக்களிடம் நலம் விசாரித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களை ஒட்டி ஏதேனும் தொழிற்சாலைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் எதற்காக மயக்கம் அடைந்தனர் என்பது குறித்து தெரியாததால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.