
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மூனு ரோடு பகுதியில் காவிரி ஆற்றில் கட்டளை கதவணை உள்ளது. இந்தப் பகுதி ஜல்லிக்கற்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. இங்கு முகம் சிதைந்த நிலையில் வாலிபர் பிணம் மிதப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இறந்தவரின் முகம் சிதைந்த நிலையில் இருந்ததுடன் அந்த வாலிபரின் நெஞ்சு பகுதி பிளக்கப்பட்டு அதில் கருங்கல் நுழைத்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டுகளில் செங்கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டு சென்றது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அந்த வாலிபரின் உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே சமயம் கொலை செய்யப்பட்டவர் யார்?. எந்த உரை சேர்ந்தவர்?. எதற்காக கொலை செய்யப்பட்டார்?. அவரை கொடூரமாக கொலை செய்து கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கொலையானவரின் அடையாளத்தை காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் மாயமானவர்கள் பட்டியலை சேகரித்து வருகின்றனர். இது போல் அருகே இருக்கும் சேலம் மாவட்டத்திலும் மாயமானவர்கள் பட்டியலை சேகரித்து வருகின்றனர். மேலும் கொலையாளியை பிடிக்க பவானி டி.எஸ்.பி. உத்தரவின் பெயரில் பவானி இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.