ஹெலிகாப்டர் மூலம் மத்திய அரசு மக்களுக்காக பணத்தை வீசப்போகிறது என பரவிய வதந்தியால், கர்நாடகாவில் கிராம மக்கள் பலரும் பணத்திற்காக வானத்தை பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸ் இதுவரை 13,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இதனால் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக தொலைக்காட்சி ஒன்றில் 'ஹெலிகாப்டரில் இருந்து மத்திய அரசு மக்களுக்கு பணத்தை அள்ளி வீச உள்ளது' என வெளியான செய்தியின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை நம்பி கர்நாடக கிராமங்களை சேர்ந்த சில மக்கள், அரசு பணமளிக்கும் என காத்துக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, இப்படி ஒரு செய்தியை ஒளிபரப்பியது தொடர்பாக, விளக்கம் கேட்டு அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 2,000 நோட்டுகளில் “நானோ சிப்” பொருத்தப்பட்டிருப்பதாக இந்த செய்தி சேனலில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.