விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி எம்.பி., "மூன்று வேளாண் சட்டங்களால் பெரிய நிறுவனங்கள் வேளாண் பொருட்களை மொத்தமாகப் பதுக்கி வைக்கும். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மத்திய அரசு விவசாயிகளைத் தாக்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்துவிட்டது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே தீர்வாக அமையும். செங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும் வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுலுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.