குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜக, 6-வது முறையாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரம் மற்றும் பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது. மறுமுனையில், இழந்த தங்களது கௌரவத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆம் ஆத்மியின் வருகையால் இருமுனைப் போட்டியாக இருந்த குஜராத் தேர்தல் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில், குஜராத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. அதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளின் போது பாஜகவில் இணைந்துள்ளார். அதன் பிறகு கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மேலும் ரிவாபா பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி என்பதால், இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்ற கணிப்பில் பாஜக தலைமை சீட்டு கொடுத்துள்ளதாம்.
இந்நிலையில், குஜராத் ஜாம்நகர் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை எதிர்த்து, அதே தொகுதியில் ஜடேஜாவின் சகோதரியைக் களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். ஜடேஜாவின் சகோதரி நைனா காங்கிரஸில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ரிவாபா பாஜகவில் இணைந்த பிறகே, காங்கிரஸில் இணைந்த நைனா தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். அதனால் பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்க, ஜடேஜாவின் மனைவி போட்டியிடும் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் அவரை எதிர்த்து நைனாவை போட்டியிட வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் ஜாம்நகர் ஒரு நட்சத்திரத் தொகுதியாக பலரின் கவனத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் எதிரும் புதிருமாக போட்டியிடுவது அவர்களின் குடும்பத்திலேயே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.