'பதுக்கம்மா' என்பது தெலங்கானா மாநிலத்தில் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழா ஆகும். நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படும் காலகட்டத்தில் தெலங்கானாவில், மகாளய அமாவாசை நாளில் தொடங்கி, 9 நாட்கள் பதுக்கம்மா விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் தெலங்கானா பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான பதுக்கம்மா மலர் திருவிழா தொடங்கியுள்ளது. திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று (07/10/2021) தெலங்கானா ராஜ்பவனில் பதுக்கம்மா விழா கொண்டாடப்பட்டது. அப்போது பெண் ஊழியர்களுடன் இணைந்து, தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது.