நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது இன்று (20-05-24) நாடு முழுவதும் உள்ள 49 தொகுதிகளுக்கும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, காஷ்மீரில் நேற்று முன்தினம் (18-05-24) அடுத்தடுத்து நிகழ்ந்த 2 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர், காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளாக சென்றிருந்தனர். அப்போது அனந்த்நாக், யன்னார் பகுதியில் உள்ள திறந்தவெளி முகாமில் நேற்று முன்தினம் (18-05-24) இரவு 10 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அங்கிருந்த ராஜஸ்தான் தம்பதியினர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த அரை மணி கழித்து இரவு 10:30 மணியளவில் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலில் பா.ஜ.க நிர்வாகியான அய்ஜாஸ் அகமது ஷேக் என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு அடுத்தடுத்து 2 துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.