நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 52 இடங்களை கைப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். பின்பு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை ராகுல் காந்தி காரிய கமிட்டி குழுவிடம் வழங்கினார்.
அந்த கடிதத்தை காரிய கமிட்டி குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் செய்வதற்கான முழு அதிகாரத்தை ராகுலுக்கு வழங்கினர். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்த தேசிய வைத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார் ராகுல். இருப்பினும் ராகுல் தனது கட்சியின் தலைவர் பதவி ராஜினாமாவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயரை பரிந்துரை செய்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் முழு ஆதரவுடன் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தற்போது மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்தனர். பல வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.