டெல்லி துவாரகா பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் மீது சச்சின் என்ற 20 வயது இளைஞர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபரும் மாணவியும் காதலித்து வந்ததாகவும், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த மூன்று மாதங்களாக சச்சின் உடன் மாணவி பேசவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த சச்சின் மாணவி மீது ஆசிட் வீச்சில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட சச்சினை கைது செய்தனர். ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
20 வயது இளைஞரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் ட்விட்டரில் இது குறித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “வார்த்தைகளால் எந்த நீதியையும் தர முடியாது. இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞனை அதிகாரிகள் பகிரங்கமாகப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இதை சகித்துக் கொள்ளவே முடியாது. குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் மீது 20 வயது இளைஞர் ஆசிட் வீசிய சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.