
இலக்கியப் பொதுவாழ்வில் கவிஞர் வைரமுத்து அரைநூற்றாண்டைக் கடந்திருக்கிறார். 53 ஆண்டுகளுக்கு முன்பு 1972இல் அவரது முதல் கவிதை நூலான வைகறை மேகங்கள் வெளிவந்தது. இதுவரை 39 நூல்கள் படைத்திருக்கிறார். 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார். கள்ளிக்காட்டு இதிகாசம் படைப்புக்கு சாகித்ய அகாடமி விருதையும், இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசுகளுள் ஒன்றான சாதனா சம்மான் விருதையும் மற்றும் இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ - பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர்தான். தமிழ்நாட்டு அரசின் மூன்று பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாட்டு அரசின் 6 விருதுகளையும் பெற்றிருக்கிறார். மூன்று தலைமுறைகள் கடந்து இலக்கியம் செய்து வருகிறார்.
கவிஞர் வைரமுத்து படைப்புலகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச் 16 அன்று சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றுகிறார். அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளை முன்வைத்துப் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்குகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதி, கடந்த ஆண்டு வெளியான மகாகவிதை நூலை மறைமலை இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘Vairamuthu’s Mahakavithai’ என்ற ஆங்கில நூலை ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி வெளியிடுகிறார். மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எம்.பி முதற்படி பெற்றுக்கொள்கிறார்.
கருத்தரங்கம் நான்கு அமர்வுகளாக நடைபெறுகிறது. கவிதை அரங்கு - கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஆய்வு செய்கிறது. நாவல் அரங்கு - கவிஞர் வைரமுத்துவின் நாவல்களைப் பேசுகிறது. கட்டுரை அரங்கு - கவிஞர் வைரமுத்துவின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் திறனாய்வு செய்கிறது. பாடல் அரங்கு - கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்களின் நயம் பாராட்டுகிறது. சுவிட்சர்லாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட 22 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள். தேர்ந்தெடுப்பட்ட கேட்பாளர்கள் மட்டும் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்கள். கருத்தரங்கம் காலை முதல் மாலை வரை முழுநாள் நடைபெறுகிறது.
மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரைவுப் பேருரை ஆற்றுகிறார். அரங்கேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளையும், உலக அறிஞர்கள் கட்டுரைகளையும் தொகுத்துத் தயாரிக்கப்பட்ட ‘வைரமுத்தியம்’ என்ற ஆய்வு நூலை முதலமைச்சர் வெளியிடுகிறார். பாரத் பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி முதற்படி பெற்றுக்கொள்கிறார். நிறைவாகக் கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார். டிஸ்கவரி புக் பேலஸின் மு.வேடியப்பன் விழாவை ஒருங்கிணைத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.