
தி.மு.க. மகளிரணி சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (28/02/2025) சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது. இந்த விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, "தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், இதுதான் ஒரே இலக்கு என நமது முதல்வர் கையில் எடுத்திருப்பது இந்த மொழியை, இந்த இனத்தை காப்பாற்றுவதற்கான உறுதிமொழி. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இதை நாங்கள் செய்ய வேண்டிய எந்த அவசியமில்லை, ஏனெனில் தமிழ்நாடு அரசியல் களத்தில் நீங்கள்(பாஜக) இல்லவே இல்லை. எதற்காக இப்போது மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கத்தை முன் வைக்கிறீர்கள் என கேட்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என நம் முதல்வர் முடிவெடுத்து பேசவிடவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை தராமல் ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொண்டு நீங்கள் புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டால் தான் உங்களுக்கு தர வேண்டிய நிதியை தருவேன் என்று சொல்வது மிரட்டலா இல்லையா. அந்த மிரட்டலை மானமும், மரியாதையும், சுயமரியாதையும் உள்ள எந்த தமிழனும், தமிழச்சியும் ஏற்றுக் கொள்ள முடியுமா?
இதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் பேசுகிறார். ஏனென்றால் என்னுடைய நாட்டில் உள்ள பிள்ளைகள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை நீ நிர்ணயம் செய்யாதே, எத்தனை மொழியை படிக்க வேண்டும் என நீ நிர்ணயம் செய்யாதே என்கிறார். இங்கு என்னோடு இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேருக்கு இந்தி தெரியும். எனக்கு தெரிந்தவரையில் யாருக்கும் இந்தி தெரியாது. ஆனால் நாங்கள் டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். அங்கு இருக்கக்கூடியவர்களுடன் பழகுகிறோம். ஒரு நாளும் இந்தி தெரியாததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. நமது அமைச்சரின் பிள்ளை சட்டப்படிப்பு பயில்வதற்காக லண்டன் சென்றுள்ளதாக தெரிவித்தார். இந்தி தெரியாமல் தான் அவரும் நாட்டை விட்டு வேறு நாடு சென்றுள்ளார்.
நம்முடைய முதலமைச்சர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் பாலகிருஷ்ணன் அவர்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமித்துள்ளார். அவர் இதற்கு முன்னாள் ஒடிசா அரசின் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்பு தேர்தல் ஆணையராக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவருக்கும் இந்தி பேச தெரியாது, ஆனால் அதனால் என்ன நஷ்டம் நிகழ்ந்தது.
இன்றைக்கு தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாடுகளிலே மிகப்பெரிய இடங்களை அடைந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு இந்தி தெரியும். இங்கு இந்தி படிப்பதனால் யாருக்கும் எந்த புதிய லாபமும் கிடைக்கவில்லை. அவர்களுக்குத் தேவை இருந்தால் அப்போது அவர்களே படித்துக் கொள்வார்கள். இன்றைய சூழலில் நிறைய குழந்தைகள் தொலைக்காட்சி தொடரை பார்ப்பதற்காக புதிய மொழியை கற்கிறார்கள்.
ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒருவர் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து பயில வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு மூன்று மொழி படிக்க வேண்டும் அதில் இந்தியை படித்தால்தான் முன்னேற்றம் என திணிப்பதை தான் நமது முதல்வர் எதிர்க்கிறார். மேலும் நமக்கு கொடுக்க வேண்டிய பங்கினை நியாயமாக வழங்கிடாமல் மொழியை கற்றால் தான் விடுவிப்போம் என மிரட்டுவதை கண்டு தான் நமது முதலமைச்சர் கொதித்து எழுந்தார்.
அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு இப்போது நடக்கவில்லையே ஏன் எதிர்க்கிறீர்கள் என கேட்டு பாஜக பதறுகிறது. நடக்கும் முன்னரே நாம் பேச வேண்டும், ஒரு விஷயம் நடந்த பின்னர் பேசினால் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள் என கேட்பார்கள். இந்த சீரமைப்பு நிகழும் என்பதை சமீபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட மறுக்கவில்லை.
முன்னதாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியில் தொகுதி மறு சீரமைப்பு நடைபெறும் என்று தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மகளிர் மசோதா கொண்டுவரப்பட்ட போது தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு தான் மகளிர் மசோதா செயல்பாட்டுக்கு வரும் என தெளிவாக சொல்லப்பட்டது. இது நடக்கப் போகிறது என்கிறபோதே நாம் நம்முடைய எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். மக்கள் தொகை அடிப்படையில் இதை நீங்கள் செய்வீர்கள் என்றால் நாங்கள் மிகப்பெரிய இழப்பிற்கு ஆளாவோம்.
தற்போது இருக்கும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்பது தொகுதிகள் போய்விடும். 30 பேர்தான் தமிழ்நாட்டில் இருப்பார்கள், சிறிது காலத்தில் இன்னும் குறைத்திடுவார்கள். இப்படி குறைந்து கொண்டே வந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு தேர்தல் நேர பிரச்சாரங்களுக்கு கூட வர மாட்டார்கள். நாம் சொல்லக்கூடிய எந்த விஷயமும் அவர்களது காதுகளில் ஏறாது. இங்கு போதுமான பிரதிநிதிகள் இல்லை என்றால் நமக்கான மரியாதை இருக்காது. இவ்வாறான சூழ்நிலையில் நமது உரிமைகளை எப்படி கேட்க முடியும். தற்போது போதுமான பிரதிநிதித்துவம் இருந்த போதுமே நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். நன்கு படிக்கக்கூடிய மாணவனை வகுப்பறை விட்டு வெளியே நிற்கும்படி சொல்வதைப் போல நாம் பாதிக்கக் கூடிய அளவிற்கு மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு நடந்து விடக்கூடாது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கை குறையாது என கூறிய அமித்ஷா உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிகப்படுத்த மாட்டோம் எனக் கூறவில்லை. இன்றைக்கு தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மிகப்பெரிய நாடுகளில் பொறியாளர்களாக, மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களில் எத்தனை பேருக்கு இந்தி தெரியும். அதனால், இந்தி படித்து யாருக்கும் எந்த புதிய லாபம் கிடைக்கவில்லை, தேவைப்படும்போது படித்துக் கொள்வார்கள்.

நிறைய பிள்ளைகள் கொரியன் நாடகம் பார்க்க வேண்டும் என்பதற்காக கொரியன் மொழியை கற்றுக் கொள்கிறார்கள். ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்து கொள்வார்கள். நான் மூன்றாவது, நாலாவது மொழியைப் படிக்க வேண்டுமா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீ மூன்று மொழி படித்ததால் தான் ஒரு பெருமை இருக்கும் என்று திணிக்கும் போதும், நியாயமான பணத்தைத் தர முடியாது என்று சொல்லும்போது தான் முதலமைச்சர் கொதித்து எழுதுகிறார். அதே போலத் தொகுதி மறுசீரமைப்பு, தற்போது நடைபெறவில்லை, ஏன் பதறுகிறார்கள் என்று பிஜேபியினர் கூறுகின்றனர், நடந்து முடிந்த பிறகு பேசமுடியுமா? ஆனால், அந்த தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்பதை சமீபத்தில் பேசிய அமித்ஷா மறுக்கவில்லை. அதற்கு முன்னால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது நடைபெறும் என்று தெள்ளத்தெளிவாகப் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லை மகளிர் மசோதா கொண்டுவரப்பட்ட போது, அந்த மசோதாவில், தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு தான், இந்த மகளிர் மசோதா செயல்பாட்டுக்கு வரும் என்று தெளிவாக சொல்லப்பட்டது. எது நடக்கப் போகிறது, அப்போதும் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நடக்கப் போவதிற்கு, முன்னால் மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் நாங்கள் மிகப்பெரிய இழப்புக்கு ஆளாவோம்.
தற்போது 39 பேர் மக்களவையில் இருக்கிறோம், அதில் 9 பேர் போய்விட்டால், 30 பேர் தான் இருப்போம். இப்படி தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா, கர்நாடகா குறைந்து கொண்டே வந்தால் நம்மைப் பற்றிய கவலைப் பட மாட்டார்கள். நாம் சொல்வது எதுவும் அவர்களின் செவிகளில் கேட்காது.
இங்கே, போதுமான பிரதிநிதிகள் இல்லை என்றால், ஒரு கட்சி என்ன செய்யும் தமிழ்நாட்டில் 39 எம்.பி மற்றும் பாண்டிச்சேரியில் 1, மொத்தம் 40 பேர். இந்த எம்.பிக்கள் இருந்தால்தான், நாம் பலமான ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை இருந்தால் தான் நம்ம சொல்றதுக்கான மரியாதை இருக்கும்.
அது இல்லவே இல்லை என்றால், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா, தமிழ்நாட்டிற்கு அங்கே என்ன மரியாதை இருக்காது. நம்முடைய உரிமைகளை எப்படி கேட்க முடியும்? இவ்வளவு இருக்கும்போதே, நம்மை மிரட்டுகிறார்கள்.
இதனால்தான், தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, கலைஞர் கல்விக்காக தொடர்ந்து பாடுபட்டார், அதனால் தான் மக்கள் தொகை இங்கே குறைந்து இருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டதால் உருவான ஒன்று. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறக்கூடாது.
அமைச்சர் அமித்ஷா என்ன சொல்கிறார், தமிழ்நாட்டிற்குத் தொகுதிகள் குறையாது என்றும், மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிகப் படுத்தமாட்டோம் என்று சொல்லவில்லை.
இதைத் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு நேர்மையான பதில் சொல்லுங்கள். பாஜக பதில் சொல்லாமல், தேர்தலுக்காகப் பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். இந்த கேள்விகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய நேர்மையை நியாயத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பதில் சொல்லுங்கள். அதுதான் நம்முடைய முதலமைச்சர் பிறந்தநாள் செய்தியாகத் தமிழ்நாடு மக்களுக்கு வேண்டுகோளாக விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் நலன்களையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டில் உரிமைகளுக்காக ஒன்றுபடுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், இதுதான் ஒரே இலக்கு" என்று ஆவேசமாக பேசினார்.
இந்த விழாவில், சென்னை தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக மாநில மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.