இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானி, ஆசியா அளவிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், இந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பெரும்பணக்காரராக இருந்துவந்த அதானி, ஆசிய அளவிலும் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சீன பணக்காரர் ஜோங்ஷான்ஷானை பின்னுக்குத் தள்ளி, அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானியும் அதானியும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். அம்பானி 13வது இடத்திலும், அதானி 14வது இடத்திலும் உள்ளனர். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 32 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், முகேஷ் அம்பானி இந்த வருடத்தில் மட்டும் 175.5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதனை புளூம்பர்க் இதழ் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அதானியின் நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் மட்டும் அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகளின் விலை 1,145% வரை அதிகரித்துள்ளது, அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவன பங்குகளின் விலை 827% வரையும், அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்குகளின் விலை 615% வரையும், அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனப் பங்குகளின் விலை 435% வரையும், அதானி பவர் நிறுவனம் தோராயமாக 189 % வரையும் வளர்ச்சி அடைந்துள்ளன.