உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.