மேற்குவங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இருப்பினும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
இதனையடுத்து சில பாஜக தலைவர்கள் திரிணாமூல் கட்சியில் இணைந்தனர். அதேபோல் திரிணாமூல் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற பலரும் மீண்டும் திரிணாமூல் கட்சிக்குத் திரும்ப முயன்றனர். அதேபோல் பாஜக எம்.எல்.ஏ-க்கள் பலரும் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் திரிணாமூல் காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவரும், பின்னர் அதிலிருந்து விலகி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ ஆனவருமான முகுல் ராய், கடந்த ஜூன் மாதம் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள தன்மோய் கோஷும், பிஸ்வஜித் தாஸும் அடுத்தடுத்த நாட்களில் பாஜகவிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸிற்கே திரும்பினர்.
இந்தநிலையில் திரிணாமூல் கட்சியிலிருந்து பாஜகவிற்குச் சென்று, சட்டமன்ற உறுப்பினரான சௌமன் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸிற்கே திரும்பியுள்ளார். இதன்மூலம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திரிணாமூல் காங்கிரஸிற்குத் தாவிய பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.