Skip to main content

“அரசுத் துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வர இருக்கிறது” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 12/03/2025 | Edited on 12/03/2025

 

will be employment opportunities for young people in government departments

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு  இன்று அடிக்கல் நாட்டி, ரூ.14.31லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி  மையக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி  பேசும்போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக  பல்வேறு திட்டங்களை அறிவித்துத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக  விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  மழைகாலங்களில் மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் குளங்கள், நீர்  நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சிமெண்ட்  தளங்கள் அமைக்கப்பட்டு தண்ணீரை குளங்களுக்கு கொண்டு சென்று சேமிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

will be employment opportunities for young people in government departments

குளங்கள், நீர்நிலைகளை  துார்வாரும் போது அள்ளப்படும் மண் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டுப் பணிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்கரைப்பட்டி  ஊராட்சி, மல்லையாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு  உறுதித் திட்டத்தில் ரூ.73.80 லட்சம் மதிப்பீட்டில் கொம்பு அணை முதல் சீலையங்குளம் வரை சாய்தள வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணி மற்றும்  சித்தரேவு ஊராட்சி, மருதாநதி அணை வடக்கு வாய்க்காலில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில்  ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி என ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்துக் கிராம  அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்(2023-2024) ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும், கடைக்கோடியில்  வசிக்கும்  மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.  சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலிஷத்தை முதலமைச்சர்  நிறைவேற்றியுள்ளார்.

will be employment opportunities for young people in government departments

படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில்  வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக  வெளிவரவுள்ளன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களை  பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணாமூர்த்தி, அருள்கலாவதி, வட்டாட்சியர் முத்துமுருகன், அரசு  அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்